என் குரல்!
உமக்காக ஒலிக்கிறது

நனைந்த நரி

நீலச்சாயம் வெளுத்துப்போச்சு டும் டும் டும் டும்….

ராசா வேசம் கலைசஞ்சு போச்சு டும் டும் டும் டும்….

ஏற்கனவே இராதாகிருஷ்ணன் B. Sc., CT, MSc., CT படிப்புகளை பொறியியற் கல்லூரிகளுக்கு வழங்க நடத்திய கூத்துக்களையும் அதற்கு கலை அறிவியல் பட்டங்களை வழங்கும் பல்கலைக் கழகங்கள் கடுமையாக எதிர்த்து வெற்றி பெற்றதையும் என் குரலில் ஒரு வருடத்துக்கும் முன்னரே புட்டுப் புட்டு வைத்திருந்தேன்.

இதில் இணையவழித் (ஆன்லைன்) தேர்வுகள் தான் கூத்தோ கூத்து… மாணவர்களைக் கல்லூரிகள் இணையதளம் வழியாகத் தேர்வு எழுத வைப்பது கூட கணினிக் காலத்தின் கட்டாயம் எனலாம். ஆனால் ஆன்லைனில் தேர்வுத்தாள் திருத்தும் கூத்துத் தான் பெருங்கூத்து.

இப்போது அய்யா வசமாக மாட்டிக்கொண்டார். இதற்குப்பிறகு இவர் வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறார். மரியாதை, மானம் எல்லாம் டைட்டானிக்கில் மூழ்கிப்போன பிறகு பணத்தை வைத்துக் கொண்டு மணியாட்டிச் சாமியாராக வேண்டியதுதான். கல்வியை வியாபாரமாக்கும் இவர்களைப்போன்ற கூத்தாடிக் குப்பன்களை நடு வீதியில் நிறுத்தி எருமைச் சாணியைக் கரைத்து தலையிலுருந்து ஊற்ற வேண்டுமென்று தோன்றுகிறதல்லவா?

ராதாக்கிருஷ்ணன்

ராதாக்கிருஷ்ணன்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வளவு சிரமங்களுக்கிடையில் இரத்தக் கண்ணீர் சிந்தி படிக்கவைக்கிறார்கள். எவ்வளவோ மாணவமணிகள் படிக்க தங்கள் தூக்கத்தையும் உறவினர்களையும் விட்டு வெளியூரிலெல்லாம் சென்று தங்கிப் படிக்கிறார்கள். கல்விதான் வாழ்வில் முக்கியம் என்பதன் மகத்துவத்தைச் சொன்ன மகான்கள் வாழ்ந்த மண்ணில் இப்படியும் கொடுமை நடக்கிறது. இதையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்கிறோம் என்றால் இதைவிடக் கேவலம் வேண்டுமா?

இவ்வளவு ஏன் ஆசிரியர் தினமாகக் கொண்டாடக் காரணமான அந்த அருமைப் பேராசிரியர் இராதாக் கிருஷ்ணன் பெயரை வைத்துகொண்டு ஆசிரியர் இனத்துக்கே களங்கம் ஏற்படுத்திய கோடாரிக் காம்பு இவர் என்று நாம் சொன்னால் அது மிகையில்லை. பணத்தையும் பதவியிலுள்ளவர்களையும் வைத்துத் தான் இவர் இப்படிவந்திருக்க முடியும் என்றால் முதலில் அந்தப் பணம் எங்கிருந்து வந்தது. எந்த அரசியல் தலைவர் இதற்குக் காரணமானவர். அவர் கொடுத்த பணத்திலேதான் இவர் இப்படியொரு மோசடிக்கு முதலீடு செய்திருக்க முடியும் என்கிற ரீதியில்தான் விசாரணை நடத்த வேண்டும்.

இவர் பதவிக்கு வரும்போதே பல பிரச்சனைகள் எழுந்தது. பல மூத்தவர்கள் பதவிக்குத் தகுதிபெற்றிருந்தும் இவர் வர அன்றே எதிர்ப்புக் கிளம்பியது. யாரும் தடுக்கவில்லை. இதற்கெல்லாம் ஒரு கூட்டம் காரணமாயிருக்கலாம் ஆனால் நமக்கென்ன என்று பேசாமலிருந்த நல்லவர்களுக்கும் அதில் பங்கு உண்டு.  அவர்களுக்கெல்லாம் சொல்லவேண்டியது என்ன தெரியுமா?

போங்கைய்யா போங்க….

உங்க வீடு தீப்பற்றி எரியும்போது இப்படித்தான் கண்டுகொள்ளாமல் போவீங்களா?

நம் சந்ததிக்கு ஆரோக்கியமான அறிவுள்ள சமுதாயத்தைக் கொடுத்துவிட்டுப் போவதைவிட உங்களுக்கு வாழ்க்கையில் வேறென்ன நோக்கமிருக்கிறது?

One Response to “நனைந்த நரி”

  1. எப்போதோ நடக்கவேண்டியது. இப்போ நடந்திருக்கு. “தர்மத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்” எனும் இயற்கையின் மர்மத்தை நம்மாலே உலகம் கற்கும்.


Leave a Reply