என் குரல்!
உமக்காக ஒலிக்கிறது

பிச்சைக்காரர்களா இவர்கள்!

என் தந்தை கம்பிவடத்தொலைக்காட்சி ஒளிபரப்பில் இருந்தார். கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் இணைப்புக்கான மாதத்தொகை சரியாக அவர்களே கொடுத்துவிடுவார்கள். இணைப்பை பழுதுபார்க்கப்போன பணியாளர்களின் பேச்சில் அந்த வீட்டைப்பற்றி ஒரு அதிர்ச்சியான தகவலைக் கேட்டேன். வீட்டில் உயர்ரக தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது, குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது, அரைவை இயந்திரம், துணிநேர்த்திப்பெட்டி, ஒளிபடவட்டு (CD/DVD) இயக்கி முதலானவைகளும் உண்டு. ஆனால் அவர்கள் செய்யும் தொழில் என்ன தெரியுமா…?
பிச்சை எடுப்பது!
ஆம். ஆச்சரியமாக இருக்கிறதா…? கேட்டதும் நொந்து போனேன். தினமும் காலை எழுந்து குளிக்கமாட்டார்கள். பழைய பிய்ந்துபோன துணியை அழகான கைப்பைகளில் எடுத்துக்கொண்டு பிரமாதமான உடைகளில் வீட்டைவிட்டு வெளியேறி கோவையிலிருந்து 40 கிலோமீட்டர் தூரம் உள்ள மக்கள் கூட்டம் மிகுந்துள்ள திருப்பூர் நகரத்துக்குச் சென்று பழைய உடைகளை மாற்றிக்கொண்டு பரவலாகப் பிரிந்து பிச்சை எடுக்க ஆரம்பிப்பார்களாம். இந்தத் தொழிலில்(!) தாய், தந்தை, மகன்கள், மகள்கள் மற்றும் மருமகள்கள் சகிதம் ஈடுபட்டுள்ளார்கள்.

குழந்தைகள் மட்டும் பிரமாதமான சீருடையணிந்து பள்ளிக்குச் சென்றுவருகிறார்கள். கொஞ்சம் மனதைத் திடப்படுத்திக்கொண்டு தொடர்ந்து படியுங்கள். அவர்களின் குடும்பத்தில் மொத்த மாதவருமானம் என்ன தெரியுமா நண்பர்களே….? 30,000 முதல் 40,000 வரை.

இந்தக் கொடுமையை எங்கே போய்ச்சொல்வது. கோயில் குளங்களில், பேருந்து நிறுத்தங்களில், மக்கள் நெருக்கம் மிகுந்த கடைவீதிகளில் போவோர் வருவோரிடமெல்லாம் காசுகேட்டு நச்சரிக்கும் மனிதர்களைப் பார்த்தால் கொஞ்சம் கவனத்தைச் செலுத்துங்கள். இருவரில் ஒருவர் உங்களைவிட அதிகமாகச் சம்பாதிப்பவராகத்தான் இருப்பார். பணக்காரர்களின் வருகை எங்கே அதிகம் இருக்கிறதோ அங்கேதான் இவர்கள் அதிகம் மொய்க்கிறார்கள். சர்வ சாதாரணமாக 10 ரூபாய், 20 ரூபாய்த்தாள்களை எடுத்துக் கொடுப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

பிச்சைக்காரர்கள் பெருகுவதற்குக் காரணம் தெரிகிறதா… ஒருகாலத்தில் பழைய மற்றும் மீந்துபோன உணவைப்பெற்றுக்கொள்ள வந்த பிச்சைக்காரர்களை இப்போது நீங்கள் பார்க்க முடிகிறதா? இப்போதெல்லாம் இவர்கள் 1ரூபாய்க் காசை வாங்க மறுக்கிறார்கள். அல்லது வாங்கிவிட்டு ஏசிவிட்டுப்போகிறார்கள்.

இவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று சொல்லிப்பாருங்கள் உங்களைத் திட்டிவிட்டுத்தான் போவார்கள். கிராமத்தில் ஒரு பழமொழி கூடச்சொல்வார்கள்.

தினமும் பிச்சையிடும் ஒரு பெண்மணி அன்று உணவு மீந்துவிடாத காரணத்தால் பிச்சையிடவில்லையாம். ஆனால் எப்போதும் போடாத ஒரு பெண்மணி அன்று மீந்துபோனதைப் போட்டாளாம். அந்தப் பிச்சைக்காரன் சொன்னானாம் “எப்போதும் போடாத மகராசி இன்னைக்கு பிச்சையிட்டாள், ஆனால் எப்போதும் போடும் கழுதை இன்றைக்குப் பிச்சை போட மறுத்தாள்” என்று.

ஆக பிச்சையிடுவதால் புண்ணியம் கிடைக்குமென்று நீங்கள் நினைத்தால் போய் அனாதை இல்லங்களில் வாழும் குழந்தைகள் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களுக்கு நன்கொடை கொடுங்கள். அதுதான் புண்ணியம். வீணாக இந்தக் கோடீஸ்வரப் பிரபுக்களுக்குக் கொடுத்துப் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள்!

4 Responses to “பிச்சைக்காரர்களா இவர்கள்!”

  1. ur absolutely correct….

  2. இதுதான் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சனை. ஆனால் நம் அரசாங்கம் இதைக்கண்டு கொள்வதாய் இல்லை. 2 ரூபாய்க்கு அரிசி, இலவச டிவி என்று அரசாங்கமே பிச்சைதான் போடுகிறது. சோம்பேறிகள் பெருகிவிட இதைவிட வேறென்ன காரணம் இருக்கமுடியும்!

  3. இது எனக்கு நெடு நாளாக எழும் சிந்தனை. நமக்கு பிச்சைகாரர்களை ஆராய நேரம் இல்லை. குடிசை ஒழிப்பு வாரியம் போல் இவர்களை ஒழிக்க ஏன் ஒரு வாரியம் அமைக்க கூடாது. சாலைகளில் தெரிஞ்சு திரியும் பிச்சைகாரர்களை, பைத்தியகரர்களை ஏன் சீரமைக்க கூடாது. குழந்தைகளுக்கு “Child லைன்” உண்டு. ஆனால் முதியவருக்கும், மன அமைதி இல்லாதவர்கும்?

    உங்கள் குரல் ஒலிக்கட்டும் !

  4. எப்போதும் இந்தமாதிரி மனிதர்களைப்பார்த்து நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒருபோதும் இவர்களின் பின்புலம் என்ன எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள் என்று ஆராய நேரமோ ஆர்வமோ இருந்ததில்லை. இருந்தபோதும் அடிக்கடி இவர்களின் அளவற்ற வாழ்க்கை பற்றி பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தமாதிரியான அநியாயங்கள் என்று முடியும்?
    உங்கள் பதிவைப் படித்ததும் இவர்களுக்கு இனி நாம் உதவக்கூடாது என்பதை மட்டும் முடிவுசெய்துவிட்டேன். எப்போர்ப்பட்ட நேரத்திலும் ஒர் ஐந்து விழுக்காடு மூன்றுமுறை யோசிப்பேன். இப்போது அதுவும் இல்லை

    ஈஸ்வர் மூலம் நான் உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். பாராட்டுக்கள்.(உங்களைவிட இளையவளாயிருந்தாலும்) உங்களைப் போன்றவரைப் பார்ப்பது இனிது.

    வாழ்த்துக்கள்!


Leave a Reply