என் குரல்!
உமக்காக ஒலிக்கிறது

செப்
02

நீலச்சாயம் வெளுத்துப்போச்சு டும் டும் டும் டும்….

ராசா வேசம் கலைசஞ்சு போச்சு டும் டும் டும் டும்….

ஏற்கனவே இராதாகிருஷ்ணன் B. Sc., CT, MSc., CT படிப்புகளை பொறியியற் கல்லூரிகளுக்கு வழங்க நடத்திய கூத்துக்களையும் அதற்கு கலை அறிவியல் பட்டங்களை வழங்கும் பல்கலைக் கழகங்கள் கடுமையாக எதிர்த்து வெற்றி பெற்றதையும் என் குரலில் ஒரு வருடத்துக்கும் முன்னரே புட்டுப் புட்டு வைத்திருந்தேன். Read the rest of this entry »

ஜூன்
18

பெரும்பாலும் வியாதிகள் தரும் கிருமிகள் நம் உடலில் உள்ள செல்களை அழித்து அதன்மூலம் சுவை அறியக்கூடியவை. சமீகால கிருமிகள் (பன்றிக்காய்ச்சல், சார்ஸ், பறவைக்காய்ச்சல்) எல்லாம் நம் உடலிலுள்ள செல்களைப்போலவே உருவெடுத்து வந்துவிடுவதால் அல்லது உருவ மாற்றம் செய்துகொள்வதால் வெள்ளை அணுக்கள், நம் உடற்செல்கள் எது, கிருமிகள் எது என அறியமுடியாமல் போராடி நோய்வாய்பட்டு நாம் இறந்துபோக அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடியவை என அறியப்படுகிறது.

இது கிருமிகளுக்குச் சரி, ஆனால் சில மனிதர்களும் இப்படியிருப்பார்கள் என்றெண்ணியதுண்டா நீங்கள்?

நேரடியாக கருத்துக்கு வருகிறேன். கணேஷ் குமாரை நல்லவன் என்று உங்களில் எத்தனை பேர் தெரிந்துவைத்திருக்கிறீர்கள்? சரி ஒருநாள் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலோ அல்லது ஆர்குட் கிறுக்கலோ வருகிறது என்னிடமிருந்து. அதில் நான் கண்டபடி கெட்ட வார்த்தைகளால் உங்களை திட்டியோ தவறாக வர்ணித்தோ எழுதியிருந்தால் உங்கள் மனதில் நல்லவனாகப் பதிவாகியிருந்த நான் அந்த நிமிடமே கெட்டவனாக பதிவு பெற்றிடுவேன். நான் உண்மையில் நல்லவனோ கெட்டவனோ அதை விட்டுத்தள்ளுங்கள். இப்படி ஒன்று நடந்தால் என் நண்பர்கள், உறவினர்களில் எத்தனை பேரை நான் இழக்க வேண்டியிருக்கும்.

இப்படித்தான் சபரிராஜூ என்ற ஒருவனும் பலபேரிடம் கெட்டவனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான். அவனுடைய ஆர்குட் பக்கங்களைப் போலவே உருவாக்கி அவனது புகைப்படங்களையும் செய்திகளையும் அப்படியே எடுத்துப்பதித்து ஒரு எமகாதகன் விளையாடியிருக்கிறான். அவனது நல்ல ஆண் மற்றும் பெண் நண்பர்களுக்கு தகாத வார்த்தைகளால் மின்னஞ்சல், கிறுக்கல்கள் அனுப்பி உண்மைப் பெயருக்குச் சொந்தமானவனின் மானத்தைக் கப்பலேற்ற முயற்சி செய்திருக்கிறான். அதில் அவனுக்கு ஓரளவு வெற்றி என்றாலும் என்ன சுகம் அவனுக்கு அதில் கிடைக்கப்போகிறதென்று தெரியவில்லை.

இந்த நாசகாரனை ஆர்குட் நிர்வாகத்திடம் குற்றம் சாட்டினால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கையை விரிக்கிறார்கள் நிர்வாகிகள்.

எத்தனையோ இழந்துபோன பழைய நட்புக்களை நான் ஆர்குட்டின் மூலம் மீட்டுக்கொண்டேன். ஆனால் நன்மை இருக்குமளவுக்கு தீமையும் இருக்கத்தான் செய்கிறது. இருந்தபோதும் நான் ஆர்குட்டில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்துவிட்டேன்.

தொழில்நுட்பத்தை தவறாக எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என கங்கணம் கட்டிக்கொண்டு அலைபவர் இருக்கையில் முன்னேற்றம் எங்கிருந்து வரப்போகிறது. சபரியைப் போலவே உங்களில் யாரேனும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உங்கள் பெயர் கேவலம் இந்த இணைய சமூகத்தின்மூலமா கெடவேண்டும்…?

Feb
26

உலக வெப்பமயமாதலுக்கு எதிரான கொள்கை இப்போது காற்றில் பறக்கிறது. ஏதோ யாரோ ஆரம்பித்து வைத்தால் அதைப் பிடித்துக்கொண்டு கொஞ்சநாள் போர்க்கொடி தூக்காத குறையாக புரட்சிசெய்கிறோம். பிறகு அதையெல்லாம் மறந்துவிட்டு ஆட்டம்போட ஆரம்பித்துவிடுகிறோம். இந்த அரசியல்வாதிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது.
பாலிதீன் பைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு சட்டத்தைக் கொண்டுவந்த்து இந்த அரசாங்கம். கடைகள்தோறும் பாலிதீன் பைகளுக்கு பதிலாக நூற்பைகளும், சாக்கினாலான பைகளும் மற்றும் காகிதப்பைகளும் பயன்படுத்த சிலர் ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் அந்தச்சட்டம் சரியாக மக்களால் மதிக்கப்படாததால் அதன் இழுவையில் இப்போது தொங்கல் விழுந்துள்ளது.
மக்கள் மனதுவைக்காமல் எந்தக்காரியமும் நடக்காது. அதற்கான விழிப்புணர்ச்சியை நலச்சங்கங்கள் மக்களிடையே குறைந்தது ஒரு தலைமுறைக் காலகட்டத்துக்காவது தொடர்ந்து ஏற்றிக்கொண்டேயிருந்தால் ஒழிய நாம் திருந்தமாட்டோம்…
என்ன உங்கள் கருத்து?

ஜூலை
29

அணு ஒப்பந்தத்தைக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள், அதில் சொல்லப்படுகின்ற பிரச்சனைக்குரிய பாகங்கள் என்னவென்று சொல்லி அதற்கு தீர்வையும் கண்டு சொல்லவேண்டிய கடமை தங்களுக்கு உண்டு என்று அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் ஆட்சியில் பங்குகொண்டிருந்தது அனைவரும் அறிந்த உண்மை. இதுவரை பிரச்சனைகள் என்னவாயிருந்தாலும் அங்கு அதற்குக் காரண்மாக இருப்பது கம்யூனிஸ்ட்டுகளாயிருப்பதில் அவர்களுக்கு அவ்வளவு தீரம். எதிர்க்கட்சியான பாரதீய சனதாக் கட்சியே எதிர்க்காத போது இவர்களுக்கு தீரர்கள் என்று காட்டிக்கொள்வதற்கு அது பயன்பட்டிருக்கிறது. இந்தியாவில் கோவை உட்பட பல இடங்களில் தொழிற்சாலைகள் மூடக்காரண்மாயிருந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான். ஏதேனும் ஒரு தொழிற்சாலையை இவர்கள் திறந்துவைத்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இவர்களைக் “கம்யூனிஸத்தின் சாராம்சம் தெரியுமா?” என்று கேட்டால் தெரியாது என்றுதான் சொல்வார்கள். உண்மையான கம்யூனிஸத்தின் பெயரை கீழ்த்தர அரசியலுக்குப்பயன் படுத்திக்கொள்ளும் இவர்களுக்கு எங்கே அது தெரியப்போகிறது?

ஒரே கேள்விதான் கேட்கவேண்டும். அணு ஒப்பந்தத்தை எதிர்த்து ஆட்சியை விட்டே விலகிய இவர்கள், பெங்களூரு, ஆமதாபாத் குண்டுவெடிப்புகளுக்கும், சூரத்தில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகளுக்கும் இவர்களின் நிலைப்பாடு என்ன? என்ன குரல் கொடுத்தார்கள் இவர்கள். இவர்களுக்கு நாட்டின் வளர்ச்சி நிலை பற்றிக்கவலை இல்லை. ஓட்டுக்கள்தான் முக்கியம். இதைப்பற்றிக் கேள்வி எழுப்பினாலே இஸ்லாமியச் சகோதரர்கள் ஓட்டுக்கள் போய்விடவா போகிறது. ஏனிந்த பயம்?

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது கம்யூனிஸ்ட்டுகளின் இரட்டை வேடம் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை!

ஜூலை
11

ஒரு தனி மனிதனின் குமுறல்

என்குரல் வாசகர் திரு சக்திவேல் எழுதிய கடிதத்தை இங்கு பதிவிடுகிறேன்.

என் குரல் வலைப்பக்கத்தின் வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள்…

நம் வாழ்வில் நடக்கும் உண்மைச்சம்பவங்கள் பெரும்பாலானவை கசப்பான உணர்வுகளையே நமக்குத்தருவது இயற்கைதான். ஆனாலும் தாங்கிக்கொள்ள முடியாத பல செய்திகளும் நிகழ்வுகளும் அடிக்கடி நடப்பதால் உள்ளம் குமுறுகிறது. அந்தக் குமுறல்களின் தொகுப்பாக இந்தக் கடிதத்தை வாசகர்களுக்காக எழுதியுள்ளேன். இதன் நோக்கம் மக்களின் விழிப்புணர்வை அதிகமாக்குவதே அன்றி யாரையும் புண்படுத்துவதல்ல.

“பொதுக்காரியங்களிலே ஈடுபடுகிறவர் யாராவது தன் கவுரவத்தைப் பற்றிச் சிந்திப்பாராயின், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக்காரியத்தைப் பயன்படுத்திக்கொள்பவரே ஆவார்” -தந்தை பெரியார்.

தந்தைப் பெரியார் எவ்வளவு பெரிய கருத்தை மிகவும் எளிதாகச் சொல்லிவிட்டார். அவர் கனவு நமது சமுதாயத்தில் அடியோடு அழிந்து விட்டது.இதை அழித்தவர்கள் நம் அரசியல்வாதிகள்தான்.

பொதுக்கூட்டம் என்ற பெயரில் அவரவர் கட்சியையும் மற்றும் தனிப்பட்ட அவர்கள் கவுரவத்தைப் பெருக்கிக்கொள்ளவே முயல்கிறார்கள். அவர்கள் கட்சித்தொண்டர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களில் பலருக்கு அற்பப் பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கிறார்கள். மாநாடு என்ற பெயரில் இந்த அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே கிடையாது. சமீபத்தில் கோவையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடந்தது. அதில் அவர்கள் முன்னிருத்திப்பேசிய கருத்து என்னவென்றால் விலைவாசி உயர்வு. ஆனால் மாநாடு நடத்திய கட்சி ஆளும் கட்சியுடன் கூட்டணிவைத்துத்தான் ஆட்சி அமைத்துள்ளது. விலையுயர்வை தடுக்கவேண்டுமென்றால், அவர்கள்களால் மட்டுமே அது முடியும். ஊரை ஏமாற்ற இப்படி ஒரு நாடகம். மாநாடு ஆரம்பமான காலைநேரத்தில் ஒரு போக்குவரத்துக் காவலர்கூட சாலையில் இல்லை. எல்லாம் மாநாட்டு ஏற்பாடுகளுக்காக எடுக்கப்பட்டனர். தமிழ்நாட்டின் எல்லா ஊரிலிருந்தும் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்தெல்லாம் வாகனங்கள் கொடிகட்டியபடி கோவையில் குவிந்தன. நல்ல நாளிலேயே கோவையில் போக்குவரத்து நெரிசல் சொல்ல வேண்டியதில்லை; அன்று போக்குவரத்தின் நிலைமையினைச் சொல்லவும் வேண்டியதில்லை. காவலர்கள் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டுவிட்டு கட்சித்தலைவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கச் சென்றது அநியாயத்திலும் அநியாயம்.

பத்திரிக்கைகள் அதற்கும் மேல். முழுப்பக்க விளம்பரங்கள் செய்திகளை விழுங்கி அன்று காட்சியளித்தன. சம்பாதிக்க இதுதான் இவர்களுக்கு வழியா? விற்க வேண்டுமென்பதற்காக சின்ன விஷயங்களையெல்லாம் ஊதிப்பெரியதாக்கிய வண்ணம் இருப்பவைதான் இந்தப்பத்திரிக்கைகள். தொலைக்காட்சிஊடகமும் அப்படித்தான் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒவ்வொருவிதமான செய்திகள். மக்களுக்கு செய்திகள் கொண்டு சேர்ப்பது பொதுசேவை நிறுவனத்தின் கடமை. ஆனால் அவர்களுக்குத் தகுந்தாற்போல் செய்திகளை மாற்றிக்கொள்வது மக்களுக்குச் செய்யும் துரோகம். உண்மைச்செய்திகளை மறைத்தோ மாற்றியோ சொல்வது எவ்வளவு பெரிய குற்றம். ஆனால் அதைத்தான் இந்த தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் செய்கின்றன. அவைகளில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளின் பத்திரிக்கைகள்தான்.

பெரியாரின் கருத்தை மதிப்பதும் மதிக்காமல் போவதும் அவரவர் தனிச்சுதந்திரம்; ஆனால், கவுரவத்துக்காக, தன்னலத்துக்காக பொதுமக்களைப் பகடைகளாக்குவது என்னைப் பொறுத்தவரை மன்னிக்கமுடியாத குற்றம்.

- சக்திவேல்

ஜூன்
10

கற்க கசடற கற்பவை கற்றபின் விற்க
அதற்குத் தக

கொஞ்சம் பொறுங்கள்… குறளைப் படித்துவிட்டு என்னைத்திட்டாதீர்கள். நான் சொல்வது நம் நாட்டின் கல்விநிலையை அன்று திருவள்ளுவர் கண்டிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார்.

பாரதியார் பல்கலைக்கழத்தின் சமீபத்திய வீர விளையாட்டுக்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. வேலைக்குச் செல்லும் இளம்வயதினர் முதல் மூத்தோர் வரை அனைவரும் தன் விட்டுப்போன படிப்பைத்தொடர உதவுவதுதான் தொலைக்கல்வி இயக்கம். சமீபத்தில் கோவை பாரதியார் பல்கலைக் கழகத் தேர்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன (நான் இதை எழுதும்போது, ஆதாவது ஜுன் 10, 2008 ) இந்த பாடங்களைப் படிக்கும் மாணவர்களில் என்னுடன் பணியாற்றும் நண்பர்கள் சிலரும் உண்டு. மிகுந்த சிரமங்களுக்கிடையில் அவர்கள் தங்கள் உயர்கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.BU
மூன்று நாள் முன்னதாக பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தில் ஓர் அறிவிப்பு வெளியானது. SDE – Examinations scheduled to be held on 07.06.2008 is postponed (7ம் தேதி நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன) என்ற அறிவிப்புதான் அது. (முழு அறிவிப்பு: பார்க்க படம்) இதனைப்பார்த்த என் நண்பர்களும் 14ம் தேதிக்கு அனைத்து தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன என்று நினைத்து தன் விடுப்பு விண்ணப்பங்களை மாற்றிக் கொண்டனர். இரண்டு நாள் கழித்து இன்று காலை அவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி காத்திருந்தது அன்று அவர்களுக்கு தெரியவில்லை. 7ம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஒன்றுமட்டும் 14ம் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் மீதம் இரண்டு தேர்வுகளும் நேற்று (9-6-2008 ) மற்றும் முந்தாநேற்று (8-6-2008 ) நடந்துமுடிந்துவிட்டதாகவும் சிலர் சொல்லக் கேட்டு அழுகாத குறைக்குத் தள்ளப்பட்டனர். Examinations for the students admitted during 2007-08 Academic year (Annual Pattern) will be held on 14.06.2008. இந்த அறிவிப்பைப் பார்த்த அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டும் அதே பதில்தான் வந்திருக்கிறது. ஆங்கிலமே தெரியாத தற்குறிகளைப் பணியில் அமர்த்தினால் இப்படித்தான் ஆகும் என்று மண்டையில் அடித்துக்கொண்டு போகிறார்கள் சில பொறுப்புள்ள ஆசிரியர்கள். Examinations என்றால் பன்மை என்று இவர்களுக்குத் தெரியாதா? இல்லை அன்று இரண்டு தேர்வுகள் இருந்திருக்குமேயானால் அன்றையதேர்வு மட்டும் மாற்றப்பட்டதாகத் தெளிவாக எழுதத்தெரியாதா இந்த முட்டாள்களுக்கு!

இப்படிப்பட்ட அக்கறையில்லாத மனிதர்களை என்ன செய்வது. மாணவர்கள் வாழ்க்கையில் விளையாட இவர்களுக்கு அப்படி என்னதான் ஆர்வமோ… இவர்களை மனதுக்குள் ஒருமணிநேரம் திட்டித்தீர்ப்பதைத் தவிர நாம் என்னதான் செய்யமுடியும். இந்தியாவில் இப்படி எத்தனையோ பொக்கனாத்தி பல்கலைக்கழகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு என்னங்க கவலை. மாணவர்களிடம் காசு பார்க்க விதவிதமான பாடத்திட்டங்களைக் கொண்டுவரத்தான் இவர்களுக்குத் தெரியும். தன்னிடம் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஒழுங்கான முறையில் வேலை செய்கிறார்களா என்று பார்க்கக்கூட துப்பு இல்லாத இந்தப் பல்கலைக்கழகங்களில் நாமெல்லாம் படித்தோம் என்றால் வெக்கமாக இருக்கிறது.

பல்கலைக்கழகம் கட்ட நிலம் கொடுத்த பெருமான்கள்தானே இங்கு பரம்பரை பரம்பரையாக பணியாற்றுகிறார்கள். அவர்களிடம் நிலங்களுக்கான நியாயவிலையைக் கொடுத்து வாங்கியிருந்தால் அரைகுறைப் படிப்புப் படித்த அவர்களுக்கு வேலை தரவேண்டிய கட்டாயம் பல்கலைக் கழகத்துக்கு வந்திருக்காது. மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று புலம்பிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

இடம்வாங்கிய கடனுக்காக வேலை கொடுத்தால் அவர்கள் கடனுக்குத்தான் வேலை செய்வார்கள்.
கடமைக்கு எங்கே செய்யப்போகிறார்கள். பல ஞானிகளைப் பெற்றெடுத்த பாரதியார் பல்கலைக்கழகம் இன்று இப்படி ஒரு நிலைக்கு வந்திருக்கிறது.

எல்லாம் விதி! வேறென்ன சொல்ல?

மே
07

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி ஆண்டி முதல் அரசன் வரை எல்லோருக்கும் பொருந்தத்தான் செய்கிறது. பள்ளிகளில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சுதந்திரம் தரும் ஆசிரியர்கள் கூட அந்த மாணவன் கொஞ்சம் அதிகமாக அந்தச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினால் முழு சுதந்திரத்தையும் பறித்துக்கொள்வார்கள். இந்தக்கதைதான் இது. தொடர்ந்து படிக்கவும்…

தமிழ் என்றாலே இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்த பிணைப்பு என்பதை தொன்றுதொட்டு நாம் அறிந்து வந்திருக்கிறோம். தமிழ்ப்பாடங்களைக்கூட பாடல்களாகவும் நாடகமாகவும் தான் படித்திருக்கிறோம். அந்த நாடகத்தின் இன்றைய வடிவம்தான் திரைப்படங்கள். ஆனால் அவைகள் பல்கலைக்கழகங்களாலேயே தடை செய்யப்படும் அளவுக்கு கேவலமான நிலையை அடைந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பித்து கடைசியில் அசிங்கம், ஆபாசத்தின் மொத்த உருவமாக இன்றைய திரைத்துறை வந்துவிட்டது. தமிழ்த் திரைப்படங்களில் தமிழர்களைத் தவிர எல்லா மொழிமக்களும் நடிக்கிறார்கள். தமிழ் மொழியைத்தவிர எல்லா மொழி வாசகங்களையும் போட்டுப் பாட்டு எழுதுகிறார்கள். பெயர் மட்டும் தமிழில் வைத்துக்கொள்கிறார்கள் அதுவும் வரிவிலக்குக்காக மட்டும்தான். கேவலமான அரசாண்மைக்கு இந்த வரிவிலக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பெயர் மட்டும் தமிழில் வைத்தால் போதுமா? படத்தில் ஒருவர் வாயிலும் அழகான தமிழ் வார்த்தைகள் வரவில்லை.

பல்(கலை)க் கழகங்கள் தங்களுடன் இணைந்துள்ள கல்லூரிகளில் விழாக்களின் போது தமிழ் திரைப்படப்பாடல்களே இடம்பெறக்கூடாது என்று சட்டம் போடுமளவுக்கு இந்தப்பாடல்களில் ஆபாசம் தலைவிரித்தாடுகிறது. இது போதாது என்று திரைப்பட நாயகர் நாயகிகளையும் அழைத்து அவர்களை ஆடவைக்கின்றன பல கல்லூரிகள், உதாரணமாக கோவையிலுள்ள இந்துஸ்தான் கல்லூரியைச் சொல்லலாம்.

அவர்களோடு சேர்ந்து நடனமாட கல்விகற்கவந்த மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கப் படுகிறது. அது அளவுக்கு மீறிப் போனதால் தான் இந்தத் தடை உத்தரவு வந்திருக்கிறது. எவ்வளவோ அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், சாதனையாளர்கள் மற்றும் பல மாமனிதர்களை அழைக்க இவர்களுக்குத் தோன்றவில்லை!

இப்போது அந்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கே தடை உத்தரவு வந்திருக்கிறது எதற்குத் தெரியுமா? இளம்பொறியியல் (B.E., B.Tech.) படிப்புகளை அளிக்கும் தொழில்நுட்பக்கல்லூரிகளில் இளம் அறிவியல் (B.Sc) படிப்புகளை அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கக்கூடாதென்று. ஏதோ ஒருசில புராதானக் கல்லூரிகள் B.Sc. CT, B.Sc., IT, M.Sc., CT, M.Sc., IT போன்ற பட்டப்படிப்புகளை அளித்து வந்தன. உதாரணத்துக்கு PSG Tech, CIT போன்ற கல்லூரிகளைச் சொல்லலாம்.

கோவை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டவுடன் அதற்குத் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட திரு. இராதா கிருட்டினன் என்ற மனிதரால் வந்தது இந்த வினை. தான் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்து வாங்கிய பதவியை வைத்து, விட்ட காசைத் திரும்ப எடுக்கும் நோக்கில் எல்லாக் கல்லூரிகளையும் இந்த இரண்டுங் கெட்டான் பட்டப் படிப்புகளைப் பெற விண்ணப்பிக்குமாறு உசுப்பிவிட்டார். கல்வியைக் காசாக்கும் நோக்கத்தில் முளைத்துவிட்ட கல்லூரிகளும் மேலும் மேலும் காசாசை கொண்டு அந்தப்பட்டப்படிப்புகளைப் பெற்றன. 2007ம் ஆண்டு இறுதியில் ஏறக்குறைய கோவையிலுள்ள அனைத்து பொறியியற் கல்லூரிகளும் இந்த இளைநிலை அறிவியல் (B.Sc., CT, IT)படிப்புகளைப் பெற்றுக் காசுவாங்க ஆரம்பித்துவிட்டன. அந்த அனுமதிவழங்க துணைவேந்தர் அய்யா நிறைய வாங்கி, விட்ட காசையும் சம்பாதித்துக் கொண்டார். 2008ம் ஆண்டுக்கான வசூல் வேட்டையை கல்லூரிகள் ஆரம்பிக்கும் வேளையில் வந்தது புதிய ஆப்பு. ஆப்பு வைத்தது பாரதியார் பல்கலைக்கழகம். இந்தமாதிரி அறிவியல் பட்டங்களை பொறியியல் கல்லூரிகளில் அளித்தால் தன்னிடமிருக்கும் கலை அறிவியல் கல்லூரிகள் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டுதான் போகவேண்டும் என்று ஒரு வழக்கைத் தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றது. அண்ணா பல்கலைக்கழகம் இந்த அறிவியல் இளநிலை முதுநிலைப் பட்டங்களை வழங்க தடை உத்தரவு வந்தேவிட்டது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் பொறியியல் கல்லூரிகள் நடத்திய இந்தப் படிப்புக்களை இத்தனை கல்லூரிகள் போட்டிபோட்டு மலிவாக்கியதன் விளைவுதான் இது. பல கல்லூரிகள் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைக் கூட ஆரம்பித்துவிட்டன. இப்போது அவர்களுக்குக் காசைத் திரும்பக் கொடுத்தார்களா இல்லை பொறியியல் பாடத்திற்கு அனுமதி தந்தார்களா என்று தெரியவில்லை.

ஆனாலும் அரசியல்வாதிகள் நடத்தும் கல்லூரிகள் பல உள்ளதால் அவர்களின் நன்மைக்காக இந்தத் தடை விரைவில் நீக்கப்படும் என்பது திண்ணம்.
கேடுகெட்ட ஊருக்கு கூறுகெட்ட மணியகாரன்” என்கிற கதைதான் இது! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்.

Apr
29

இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைத்திருக்கவே இல்லை. நன்றாகப் பழகிக்கொண்டிருக்கும் நண்பர்களை திடீரென ஏதோ அற்பகாரணங்களுக்காக இழக்க உங்களுக்கு மனம் வருமா?

இது என்ன கேள்வி என்கிறீர்களா? வாழ்க்கையில் பல நண்பர்களை நான் அப்படி இழந்திருக்கிறேன். நீங்களும் பல நண்பர்களை இப்படி இழந்திருப்பீர்கள். இழப்பதற்குக் காரணமாகவும் இருந்திருப்பீர்கள். அப்படிப்பட்ட அற்பகாரணங்கள் பல இருக்கலாம் ஆனால் அவைகளில் முக்கியமானது மல்டி லெவல் மார்க்கட்டிங் எனும் வியாபாரம் சம்பந்தமாக உங்கள் நண்பர் உங்களை வற்புறுத்தி, அதை நீங்கள் மறுத்து அதனால் ஏற்படும் சங்கடம் ஆகும்.

மல்டி லெவல் மார்க்கட்டிங் என்றால் என்ன? ஒரு சட்டை வாங்குங்கள் உங்கள் நண்பர்களில் நான்கு பேரை அறிமுகப்படுத்துங்கள் உங்களுக்கு பணம் வரும். ஆயுள் காப்பீடு எடுங்கள், உங்கள் நண்பர்களில் இருவரை அறிமுகப்படுத்துங்கள் உங்க்ளுக்கு பணம் வரும். மாதமாதம் கைநிறைய சம்பாதிக்கலாம். இப்படியெல்லாம் கவர்ச்சிகரமாய் விளம்பரம் செய்வார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் விடமாட்டர்கள். இந்தக் கொடுமையைப் புரியவைத்து மாட்டிவிட ஓரிடத்தில் கூட்டம் வேறு நடத்துவார்கள். நான் இப்படிப்ப்ட்டவர்களிடம் இந்தமாதிரி பலவற்றைப்பார்த்திருக்கிறேன். இதில் இவ்வாறு குறைகள் இருக்கின்றன என்றால் அது வேறு இது வேறு நீங்கள் ஒருமுறை மீட்டிங் வந்து பாருங்கள் என்பார்கள். எனக்கு இந்தமாதிரி நண்பர்களைப் பிடிக்க நேரமில்லை என்றாலும் விடமாட்டர்கள். நீங்க உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் மற்றபடி நண்பர்களைப் பிடிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்பார்கள்.

இப்படி தன் அரசாங்க, உயர்பதவிகளைத் தொலைத்தவர்கள் கணக்கிலடங்காதவர்கள். உழைப்புக்கு இருக்கும் மரியாதையை கேவலமான ஆள்காட்டி வேலை செய்து சோம்பேறிகளாகவும் தாந்தோன்றிகளாகவும் மக்களை ஆக்கும் முயற்சிதான் இந்த மல்டி லெவல் மார்க்கட்டிங். இது இந்தியாவில் எனக்குத் தெரிந்து அறிமுகமானது ஆம்வே எனும் அமெரிக்க நிறுவனத்தால்.

ஆனால் இது உலகில் எந்த மூலையில் தோன்றியது தெரியுமா? புரட்சிக்கு முற்பட்ட இரஷ்யாவில் சில நிறுவனங்கள் சராசரித் தரமுள்ள தமது பண்டங்களை விற்பதற்கு இந்தச் சாதுரியமான வழியைக் கையாண்டன. அதிகமாக விற்பனை ஆகும் செய்தியேடுகளிலும் இதழ்களிலும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்படும். உதாரணத்துக்கு, ஒரு மிதிவண்டி 50 ரூபிள் என்று விற்ற காலத்தில் 10 ரூபிளுக்கு உங்களுக்கு மிதிவண்டி வேண்டுமா? நாங்கள் தருகிறோம். மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்க, இவ்வாறு விளம்பரம் செய்தால் யார்தான் மயங்க மாட்டார்கள். உண்மையில் 10 ரூபிளுக்கு அந்த நிறுவனம் ஒருவருக்கு அளிப்பது மிதிவண்டி அல்ல. நான்கு சீட்டுக்கள். இந்த நான்கு சீட்டுக்களையும் அந்த மனிதரின் நான்கு நண்பர்களுக்கு தலா 10 ரூபிளுக்கு விற்கவேண்டும். பின் அந்த 40 ரூபிளை அந்நிறுவனத்திடம் கொடுத்தால் அவர்கள் மிதிவண்டியைக் கொடுப்பார்கள். அந்த மனிதர் கையிலிருந்து செய்த செலவு 10 ரூபிள்தான் ஆனால் அவருக்கு 40 ரூபிளுக்கான மிதிவண்டி கிடைத்தது. அதேபோல அவரின் அந்த நான்கு நண்பர்கள் அவர்களின் இதர நான்கு நண்பர்களுக்கு விற்க வேண்டும். இவ்வாறு 10ரூபிளுடன் அவர்வர்களின் நான்கு நண்பர்களையும் சேர்த்து விற்று வந்த காசில் அவர்கள் மிதிவண்டி வாங்கிக்கொள்கிறார்கள்.

இதில் மோசடி எதுவுமில்லை என்றே தோன்றுகிறதல்லவா? விளம்பரம் செய்த நிறுவனமும் அதன் வாக்கை நிறைவேற்றுகிறது. நிறுவனத்துக்கும் இழப்பு எதுவுமில்லை. இதை சோவியத் இரஷ்யாவில் மக்கள் மலைச்சரிவு என்றே அழைத்தார்கள். சரி ஒன்று நான்கானது புரிகிறது. நான்கு எவ்வளவாகும், 4 x 5 = 20 ஆகும். அவர்கள் நான்கு நான்கு பேரை இந்த சரிவில் தள்ளிவிடுவதாய் வைத்துக்கொண்டால் 20 x 5 = 100 ஆகிறது எண்ணிக்கை. ஆக மொத்தம் 1 + 4 + 20 + 100 = 125 புதிய ஆட்கள் இந்த மலைச்சரிவில் உருண்டுவிழுந்து விட்டார்கள்.

மொத்தம் மிதிவண்டி வாங்கிய 25 நபர்கள் போக ஏனைய 100 பேருக்கு மிதிவண்டி வாங்கலாம் என்ற நம்பிக்கை மட்டுமே கிடைக்கிறது. மலைச்சரிவு நண்பர்க்ளது குறுகிய வட்டத்தை உடைத்துக்கொண்டு நகரெங்கும் பெருகிப் பரவுகிறது. ஆனால் ஒவ்வொருவரும் சீட்டுவாங்கக் கூடிய புதிய ஆட்களைத் தேடிப் பிடிக்க மிகுந்த சிரமத்துக்குள்ளாக வேண்டிவருகிறது. இந்த வியாபாரத்தில் இழுக்கப்பட்டு மலைச்சரிவில் உருண்டு விழுவோரின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்துச் செல்கிறது. 1, 4, 20, 100, 500, 2500, 12,500, 62,500 இப்படியாக விரல்விட்டு எண்ணக்கூடிய 8 அடுக்கினில் அறுபதாயிரம் அப்பாவிகளைத் தாண்டிச் செல்கிறது. அடுத்த அடுக்கில் எத்தனை பேர் தெரியுமா? மூன்று இலட்சத்திற்கும் மேல். இதில் வாங்க விருப்பமில்லாதவர்கள், இந்தக்கட்டுரையைப் படித்து சுதாரித்துக்கொண்டவர்கள் என ஒரு கூட்டம் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட இந்தக்கூட்டம் பெருகும் வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து இப்போது முழுக்க தன் வளர்ச்சியை இழந்து நிற்கும். அப்போது ஏமாந்து போனவர்களின் எண்ணிக்கை ஐந்தில் நான்கு பங்காய் இருக்கும். இன்னொரு உண்மை என்னவென்றால் மோசடிவேலையை ஆரம்பித்த நிறுவனத்துக்கு இப்போது முழுக்க இலாபமே. ஏனென்றால் 10 ரூபிள் மட்டும் கட்டி அட்டை வாங்கியவர்கள் மீதம் நாற்பது ரூபிளுக்கு ஆள் கிடைக்காமல் ஆப்பு வைக்கப்படும்போது அவர்கள் கட்டிய தலா 10ரூபிளை இந்த நிறுவனமே சுவாகா செய்து கொள்ளும். தாங்கள் காசு கொடுத்து வாங்க முடியாத பண்டத்தைப் பெற ஒவ்வொரு மனிதனும் தன் நண்பரைப் பணயமாக வைத்து வாங்கிக்கொள்ள நண்பர்களே கிடைக்காதவர்கள் தலையில் நாமம் போட்டு திருப்பதி போய் மொட்டை போடக் காசுகூட இல்லாத நிலைக்கு வர காரணமாய் அமைந்து விடுகிறார்கள். இரஷ்யாவின் பிரபல எழுத்தாளர் இந்தக் கூத்தினை “பரஸ்பர மோசடியின் பெரும் பெருக்கு” என்று குறிப்பிடுகிறார்.

ஆம்வே ஆரம்பித்த மோசடியில் பல நிறுவனங்களும் குதித்தன. ஒருகாலத்தில் இது பெருகி வரும் அபாயம் உணர்ந்து இதனை இந்திய அரசாங்கம் தடை செய்திருந்தது. ஆனால் காசால் அரசாங்கத்தையே விலைக்கும் வாங்கும் நிறுவனங்களால் இந்தச் சட்டம் என்னவானதென்றே தெரியாமல் போனது. மக்களைப் பாதுகாக்க அரசாங்கத்துக்குள்ள பொறுப்புகளை அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்துக்காக அழித்து மக்களை விலைபேசத்துணிந்திருப்பார்கள் என்பதில் நம் யாருக்கும் சந்தேகமில்லை.

இந்த மோசடியில் காப்பீட்டு நிறுவனமாகக் காலடி வைத்துள்ள பஜாஜ் அலயன்ஸ் நிறுவனமே ஈடுபடுகிறது. ஆயுள் காப்பீடு வேண்டுமா நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். ஏன் இன்னொருவரை நான் கட்டாயப்படுத்த வேண்டுமென்றால், உங்களுக்கு இலட்சலட்சமாய்ப் பணம் வருகிறது என்று சொல்கிறது. இப்போது இதை பைனரி மார்க்கட்டிங் என்று பெயர்மாற்றம் செய்துவிட்டனர்.

ஆதாவது நான்குபேருக்கு பதில் இருவரை அறிமுகப்படுத்துவது. எதுவாயினும் மோசடி மோசடிதான். கடைசியில் நண்பர்களை அறிமுகப்படுத்த முடியாதவர்கள் கட்டிய பணம் அமுக்கிக் கொள்ளப்படும்போது அவர்களின் சாபம் நம்மைச் சும்மா விடாது. இது அப்பட்டமான உண்மை காப்பீடே தேவைக்கு அதிகமாகப் போகும் போது அது வெட்டிச் செலவு ஆகும். LIC, UTI போன்ற அரசு நிறுவனங்களில் காப்பீடு செய்வது நமக்குப் பாதுகாப்பு. சமீபத்தில் ஒரு வங்கி திவாலான போது பொதுத் துறை நிறுவனமான LIC அதன் வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திரும்ப அளித்தது. மியூட்சுவல் பண்டு எனும் பரஸ்பர நிதிகளில் கவர்ச்சி விளம்பரங்களைக் காட்டிவிட்டு விளம்பரத்தின் கடைசியில் வேகமாகப் புரியாத அளவுக்கு கசமுசா கசமுசா என்று ஒருவன் பேசக் கேட்டிருப்பீர்கள். அதை உன்னிப்பாகக்கேட்டால் “மியூட்சுவல் பண்டுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை முதலீடு செய்யும் முன் பங்குப் பத்திரத்தைக் கவனமாப் படிக்கவும்” என்பது விளங்கும். ஏன் அதை நிறுத்தி நிதானமாய்ச் சொன்னால் என்ன? அப்போ எவனாவது அதைப் பார்க்காமல் வாங்கி ஏமாறமாட்டானா என்று அவர்கள் ஏங்குகிறார்கள் என்றுதானே அர்த்தம். உழைத்த காசே நிலைக்காத இந்தக்காலத்தில் ஏமாற்றி பெருக்கும் காசு எம்மாத்திரம்.

நல்ல நண்பர்களை இந்தமாதிரி மோசடிகளால் இழந்திருப்பீராயின் அதற்காகக் கவலைப்படாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் நல்ல நண்பர்கள் இல்லை. நம்மை விற்க நாம் ஒத்துக் கொள்ளாததால் இலாபத்தை இழந்து புத்திமாறிப்போன இவர்கள் நமக்கு நண்பராகவே இருக்கலாகாது. மலைச்சரிவு என்று இந்த மல்டி லெவல் மார்க்கட்டிங் முறைக்குப் பெயரிட்டது முற்றிலும் சரி. ஆனால் அந்தச்சரிவு ஒன்றில் நீங்கள் யாரும் விழுந்துவிடாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Apr
04

என் தந்தை கம்பிவடத்தொலைக்காட்சி ஒளிபரப்பில் இருந்தார். கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் இணைப்புக்கான மாதத்தொகை சரியாக அவர்களே கொடுத்துவிடுவார்கள். இணைப்பை பழுதுபார்க்கப்போன பணியாளர்களின் பேச்சில் அந்த வீட்டைப்பற்றி ஒரு அதிர்ச்சியான தகவலைக் கேட்டேன். வீட்டில் உயர்ரக தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது, குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது, அரைவை இயந்திரம், துணிநேர்த்திப்பெட்டி, ஒளிபடவட்டு (CD/DVD) இயக்கி முதலானவைகளும் உண்டு. ஆனால் அவர்கள் செய்யும் தொழில் என்ன தெரியுமா…?
பிச்சை எடுப்பது!
ஆம். ஆச்சரியமாக இருக்கிறதா…? கேட்டதும் நொந்து போனேன். தினமும் காலை எழுந்து குளிக்கமாட்டார்கள். பழைய பிய்ந்துபோன துணியை அழகான கைப்பைகளில் எடுத்துக்கொண்டு பிரமாதமான உடைகளில் வீட்டைவிட்டு வெளியேறி கோவையிலிருந்து 40 கிலோமீட்டர் தூரம் உள்ள மக்கள் கூட்டம் மிகுந்துள்ள திருப்பூர் நகரத்துக்குச் சென்று பழைய உடைகளை மாற்றிக்கொண்டு பரவலாகப் பிரிந்து பிச்சை எடுக்க ஆரம்பிப்பார்களாம். இந்தத் தொழிலில்(!) தாய், தந்தை, மகன்கள், மகள்கள் மற்றும் மருமகள்கள் சகிதம் ஈடுபட்டுள்ளார்கள்.

குழந்தைகள் மட்டும் பிரமாதமான சீருடையணிந்து பள்ளிக்குச் சென்றுவருகிறார்கள். கொஞ்சம் மனதைத் திடப்படுத்திக்கொண்டு தொடர்ந்து படியுங்கள். அவர்களின் குடும்பத்தில் மொத்த மாதவருமானம் என்ன தெரியுமா நண்பர்களே….? 30,000 முதல் 40,000 வரை.

இந்தக் கொடுமையை எங்கே போய்ச்சொல்வது. கோயில் குளங்களில், பேருந்து நிறுத்தங்களில், மக்கள் நெருக்கம் மிகுந்த கடைவீதிகளில் போவோர் வருவோரிடமெல்லாம் காசுகேட்டு நச்சரிக்கும் மனிதர்களைப் பார்த்தால் கொஞ்சம் கவனத்தைச் செலுத்துங்கள். இருவரில் ஒருவர் உங்களைவிட அதிகமாகச் சம்பாதிப்பவராகத்தான் இருப்பார். பணக்காரர்களின் வருகை எங்கே அதிகம் இருக்கிறதோ அங்கேதான் இவர்கள் அதிகம் மொய்க்கிறார்கள். சர்வ சாதாரணமாக 10 ரூபாய், 20 ரூபாய்த்தாள்களை எடுத்துக் கொடுப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

பிச்சைக்காரர்கள் பெருகுவதற்குக் காரணம் தெரிகிறதா… ஒருகாலத்தில் பழைய மற்றும் மீந்துபோன உணவைப்பெற்றுக்கொள்ள வந்த பிச்சைக்காரர்களை இப்போது நீங்கள் பார்க்க முடிகிறதா? இப்போதெல்லாம் இவர்கள் 1ரூபாய்க் காசை வாங்க மறுக்கிறார்கள். அல்லது வாங்கிவிட்டு ஏசிவிட்டுப்போகிறார்கள்.

இவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று சொல்லிப்பாருங்கள் உங்களைத் திட்டிவிட்டுத்தான் போவார்கள். கிராமத்தில் ஒரு பழமொழி கூடச்சொல்வார்கள்.

தினமும் பிச்சையிடும் ஒரு பெண்மணி அன்று உணவு மீந்துவிடாத காரணத்தால் பிச்சையிடவில்லையாம். ஆனால் எப்போதும் போடாத ஒரு பெண்மணி அன்று மீந்துபோனதைப் போட்டாளாம். அந்தப் பிச்சைக்காரன் சொன்னானாம் “எப்போதும் போடாத மகராசி இன்னைக்கு பிச்சையிட்டாள், ஆனால் எப்போதும் போடும் கழுதை இன்றைக்குப் பிச்சை போட மறுத்தாள்” என்று.

ஆக பிச்சையிடுவதால் புண்ணியம் கிடைக்குமென்று நீங்கள் நினைத்தால் போய் அனாதை இல்லங்களில் வாழும் குழந்தைகள் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களுக்கு நன்கொடை கொடுங்கள். அதுதான் புண்ணியம். வீணாக இந்தக் கோடீஸ்வரப் பிரபுக்களுக்குக் கொடுத்துப் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள்!